Advertise

Featured Post 5

மொசோலியம் - தாஜ் மகாலின் பெண்பால்

Written By mayuran on Thursday, May 3, 2012 | 11:09 AM


கல்லறையின் வரைகலையாக்கம்

உலகளவிலே காதலின் அடையாளமாக தாஜ் மஹால் இன்றுவரை கொண்டாடப்படுகிறது. அதற்கான தகுதி அதற்கு முற்றிலும் உள்ளது என்பதுவும் எமக்கு நான்கே தெரியும். ஆனாலும் காதலின் அடையாளமாக இன்னுமொரு உலக அதிசயம் இருந்தது என்பது நம்மில் பலருக்கு தெரியாது. (தெரிந்தவர்கள் மன்னிக்க.) அதுவும் அந்த காதல் கல்லறை இன்னும் விஷேசமானது. 
“பொம்பளைக்கு தாஜூ மஹால் கட்டிவைச்சானே, எவளாச்சும் ஒரு செங்கல் நட்டுவைச்சாளா?என்ற உலக மொக்கை பாடல் வரிகளுக்கு பதிலாக, அந்தக் கல்லறை கட்டப்பட்டது ஒரு பெண்ணால். தாஜ் மஹால் கட்டப்பட்டதற்கு காரணமாக, காதலோடு, செல்வச்செருக்கும், கலை வெறியும் இருந்தது. மொசோலியம் முற்றுமுழுதான காதல் கல்லறை. உலகெங்கிலுமே காதலின் அடையாளமாக கல்லறைகள் மட்டுமே இருப்பது ஒரு முரண் சோகம். செத்துவிடுவது,அல்லது சேராதிருப்பதுதான் காதலாக கொண்டாடப்படுகிறது காதலிக்கும் மனிதர்கள் நிறைந்த இந்த உலகத்தில். 
அரசியும், அரசனும்.
இவை தூண்களிடையே செதுக்கப்பட்டிருந்த
அரச பரம்பரையின் ஒரு பகுதி.
சின்ன ஆசியா எனப்படுகிற துருக்கியின் எல்லைகளும், சாம்ராஜ்யங்களும்அடிக்கடி மாறுபவை. கி.மு. நான்காம் நூற்றாண்டில் கேரியா என்ற அரசு அப்பகுதியில் இருந்தது. அதை ஆண்ட மொசொலஸ் கி.மு 353 இல் இறந்தான். அவனது நினைவாக தலைநகர் ஹெலிகார்னஸ்ஸஸில் (இன்று போட்ரம், துருக்கி.) அவனது மனைவி ஆர்ட்டி மிஸ்ஸியா வால்கட்டப்பட்டதுதான் காதலின் பெண்சார்பான தாஜ் மஹால்.
சிறிய அரசாக இருந்த கேரியா கி.மு ஏழாம் நூற்றாண்டில் லிண்டா பேரரசிடம் விழுந்தது. பின்னர், அதனிடமிருந்து கி.மு. 546 இல் பாரசீகப் பேரரசால் கைப்பற்றப்பட்டது. அதிலிருந்து, கேரியாவை பாரசீக மானார் சார்பாக நியமிக்கப்பட்ட சற்றப் (செட் அப் அல்ல.) கள் ஆண்டுவந்தார்கள். கி.மு. 377 இல் மொசொலஸ் அவ்வாறானதானதொரு சற்றப் ஆனான். வந்தான் தலைநகரத்தை மிய்லசா விலிருந்து ஹெலிகர்னஸஸ் க்கு மாற்றினான். அங்கிருந்த துறைமுகத்தை விருத்தி செய்தது போன்ற பலப்பல நன்மைகளை அவன் நாட்டுக்கு செய்தான். கிரேக்கத்தின் நேர்த்தியுடன் நகரத்தை நிர்மானித்தான். (தலைநகரத்தில் மக்கள்தொகை போதாது என்று நாட்டிலிருந்த மக்கள் அனைவரையும் வலுக்கட்டாயமாக அங்கு குடிவைத்தது  போன்ற காமெடிகளையும் அவன் செய்யத் தவறவில்லை.) 
நகரின் வரைபடம்.
மையத்தில் கல்லறை.
பாரசீக அரசாட்சியின் கீழ் இருப்பதால் எவ்வித குறையுமில்லை, செலவுமில்லை என்பதால் அவனும் அரசியும் முழு செல்வத்தையும் கொட்டி நகரத்தை அழகுபடுத்தினார். தமது செழிப்பை காட்ட, மன்னனுக்கு அமைக்கப்படும் கல்லறை மிகவும் பிரமாண்டமானதாக அழகானதாக இருக்கவேண்டுமென்று அரசி ஆசைப்பட்டாள். அதனால், அவள் மேற்பார்வையில், மன்னனுக்கு கல்லறை கட்டப்பட்டது- மன்னன் உயிரோடு இருக்கும்போதே. 
வரலாற்றறிஞர் பிலினி கி.மு 75 இல் இதைப்பற்றி குறிப்பிடும்போது இதனை உலக அதிசயங்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார். அவரது குறிப்பின்படி, கல்லறை 43m உயரமாக, 3 அடுக்குகளாக நிர்மாணிக்கபட்டிருந்தது. முதலாவது, சதுர அடிப்பகுதி, 33m நீளம் கொண்டிருந்தது. அடியின் உயரம் 20m ஆகவிருந்தது. அடுத்தது மொத்தம் 40 தூண்கள் கொண்ட நடுப்பகுதி. அப்பகுதி கிரேக்க கோயில்களைப்போலவே அமைக்கப்பட்டிருந்தது. உச்சியில் கூரையானது, பிரமிட் வடிவில் 24 படிகளாக  அமைக்கப்பட்டிருந்தது. அதன் உச்சியில், ஒரு அழகான குதிரை வண்டியில் அரசனும் அரசியும் செல்வதுபோன்ற சிலை அமைக்கப்பட்டிருந்தது. மொத்த கல்லறையும் பச்சை எரிமலைக்கற்களால் அமைக்கப்பட்டு, பளிங்குக்கற்களால் வேலைப்பாடு செய்யப்பட்டது. கல்லறை எங்கிலும் அமைக்கப்பட்டிருந்த சிற்பவேலைப்பாடுகளே முக்கியமான அம்ஸங்களாக இருந்தது. கிரேக்க பாணியில் அமைக்கப்பட்டிருந்த சிற்பங்கள் மற்றும் நடுப்பகுதி, எகிப்திய பாணி கூரை, துருக்கிய பாணி அடித்தளம் என்பதாக இது ஒரு சிறந்தவற்றின் சேர்வையாக இருந்தது இது. 
தனக்கான கல்லறை வேலைகள் பூர்த்தியாகும் முன்பே, கி.மு. 353இல் மன்னன் அவசரப்பட்டான். அவனது சாம்பல் கல்லறையில் வைக்கப்பட்டது. அரசி வேலைகளை துரிதப்படுத்த, நாட்டின் செல்வம் முழுவதையும் செலவிட்டாள். இடையே மன்னன் இல்லாத நாட்டை கைப்பற்ற படையெடுத்த ரோட்ஸ்ஸை (கிரேக்கர்கள்) தோற்கடித்து, அவர்களது கப்பல்களை கைப்பற்றினாள். 
மன்னன் இறந்து இரண்டு 2 வருடங்களில், அரசியும் இறந்தாள். அரசியும் இறக்க, அவளது சாம்பலும் மன்னனின் சாம்பலோடு கலக்கப்பட்டது. (உண்மையில் கேரியன் வழக்கப்படி மன்னனது கல்லறையில் அவனது மகனின் சாம்பலை மட்டுமே வைக்கமுடியும். சாம்பல்களாகவும் காதலிக்கக்கூடிய அவர்களது காதல், மரபை மீறியது.)
தலைமை இல்லாத நாடு ரோமானியர்களால் சூறையாடபட்டது. கொஞ்சம் கொஞ்சமாக பாழடைந்தது. பிற்காலத்தில் கி.பி 13ஆம் நூற்றாண்டில் ஒரு நிலநடுக்கம் வந்ததில், கல்லறை சேதமடைந்தது. 
1402இல் இடத்தை பிடித்த கிறிஸ்தவ போராளிகள் (நூற்றாண்டுப் போர். Knights of St. John என தம்மை அழைத்துக்கொண்டவர்கள்.) இஸ்லாமியர்களின் தாக்குதலை எதிர்கொள்வதற்காக, ஹேலிகர்னஸஸ்ஸில் ஒரு கோட்டையை கட்டினார்கள். 1494இல் கோட்டையை மேலும் பலப்படுத்தவென அங்கே அருகிலிருந்த ஒரு சிதைந்த கட்டிடத்தை இடித்து, அந்த கற்களை பயன்படுத்தினர். அவ்வாறு இடிக்கப்பட்டதுதான் வரலாற்றின் முதல் தாஜ் மஹால் மொசோலியம்.
இந்தக் கோட்டைக்கு வரம்பு கட்டத்தான் கல்லறை  இடிக்கப்பட்டது.
அவ்வாறு இடித்த கட்டிடத்தின் அடிப்பகுதியில் அவர்கள் ஒரு படிக்கட்டை கண்டார்கள். அவ்வழியே போக, மன்னனாது சாம்பலும், எலும்புத்துண்டுகளும், பெரும் செல்வமும் அங்கே காணப்பட்டது. பயத்துடன் அவ்விடத்தை விட்டு நீங்கிய அவர்கள்(பில்லி சூனியங்களுக்கும், பேய்களுக்கும், மற்றும் போப்பாண்டவருக்கும் கிறிஸ்தவர்கள் அனைவரும் பயப்பட காலம், அது.), அவ்விடத்தை பாதுகாக்காது விட, செல்வம் களவுபோனது. அவர்களும் அவ்விடத்தை கைவிட்டபின் எந்த சாம்பலுக்காக ஒரு நாட்டின் முழு செல்வமும் கொட்டப்பட்டு கல்லறை கட்டப்பட்டதோ, அந்த சாம்பல், காற்றோடு கலந்தது.

உச்சியில் இருந்த சிலையில்
எஞ்சிய பகுதி.
மொசோலியத்தின் உச்சியில் வைக்கப்பட்டிருந்த அரசன், அரசி குதிரை வண்டியில் போகும் சிலையின் ஒரு பகுதி பிற்காலத்தில்கண்டுபிடிக்கப்பட்டது. (இப்போதும் அது பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் உள்ளது.) பிற்காலத்தில் 19,20ஆம் நூற்றாண்டுகளில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் பல சிற்பங்கள் மீட்கப்பட்டன. இன்றுவரை உள்ள St.Peter கோட்டையின் மதில்கள் கல்லறையின் கற்களை கொண்டுள்ளன. காலமெப்போதும் தமது காதலுக்கு அடையாளமாக இருக்கவேண்டுமென்று நினைத்து ஆர்டி மிஸ்ஸியா என்ற அரசி தனது தமையனுக்கு ட்டிய கல்லறை.... (stop! எங்கேயோ உதைக்கிறது போல தெரிகிறதா? ஆம்.  ஆர்டி மிஸ்ஸியா மொசொலஸ் அரசனின் தங்கை. சொந்த சகோதரனை மணமுடிக்கும் எகிப்திய நாகரிக்கத்தின் பாதிப்பில் நடந்த கூத்து இது.) மண்ணானது. ஆனால், இன்றுவரை கல்லறையை குறிக்க மொசொலஸ் மன்னனின் பெயரே பயன்படுகிறது. காலம் கலைத்த காதலை மொழி காப்பாற்றுகிறது.

0 comments:

Post a Comment