
வைரமுத்து ....தன் முயற்சியால் கவிப்பேரரசாக உருவெடுத்தவர் ...எனக்கு மிகவும் பிடித்த கவிஞர் ....வைரமுத்துவின் கவிதைகளை ரசிப்பவன் என்று கூறுவதே ஒருவருக்குரிய ஸ்டார் தான்...அந்த அளவிற்கு அவர் எல்லோரையும் பாதித்திருக்கிறார்...அவரிடம் ஆச்சரியமான விடயங்கள் பல உள்ளன ..அவர் மாணவனாக கல்விபயிலும் போது இவர் வெளியிட்ட "வைகறை மேகங்கள் " என்ற நூல் மற்றையகல்லூரியில் அவர் மாணவனாக இருக்கும்போதே பாடமாக்கப்பட்டது இதற்கு அணிந்துரை எழுதியவர் கவியரசு கண்ணதாசன் ..நக்கீரர் போல்" கீரரோ கீறும் கீறும் கீறிப்பாரும்" என்று தன் புலமையை காட்டிபழைய தமிழ் அகராதிகளை தூசுதட்டி சொற்களுக்கு பொருள் தேடும் வேலையே கொடுக்காமல் மிகவும் எளிமையான நடையில் கவிதைகளை வழங்குவது இவரது சிறப்பு ..கவிஞருக்கே உரிய மிடுக்கான தோற்றம் நடை ரௌத்ரம் ...அதை விட முக்கியமானதாக இவரது சிம்ம குரல் எவை எல்லாவற்றையும் ஒருங்கே கொண்டிருக்கிறார் ....சோர்வுற்றவனை இவரது குரலே தட்டி எழுப்பிவிடும் ...சினிமா பிரபலங்களுக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள் ஆனால் பல முன்னணி பிரபலங்களே இவருக்கு ரசிகர்களாக இருக்கின்றார்கள் .....
எனக்கு மிகவும் பிடித்த ஒரு சில கவிதைகள் ...
சொல்லதிகாரம் ..............................
'கொல்' 'கொள்ளையடி'
சரித்திரம் அதிகம் கேட்ட வார்த்தைகள்
''தழுவு'' ''முத்தமிடு''
கட்டில்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள்
''ஆராரோ'' ''சனியனே''
தொட்டில்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள்
''உனக்கெப்போது கல்யாணம்?''
விலைமகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்
''உருப்போடு'' - உருப்படமாட்டாய்''
வகுப்பறைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்
''இன்னொரு ஜென்மம்
என்றொன்றிருந்தால்''
பூங்காக்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள்
''கடைசியாய் எல்லாரும்
முகம்பார்த்துக் கொள்ளுங்கள்''
மயானங்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள்
''சவால் விடுகிறேன் - சபதம் செய்கிறேன்'
மேடைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்
'பாலாறு - தேனாறு'
பொதுஜனம் அதிகம் கேட்ட வார்த்தைகள்
''மறக்காமல் கடிதம் போடு''
ரயிலடிகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்
''அய்யா குளிக்கிறார்''
தொலைபேசி அதிகம் கேட்ட வார்த்தைகள்
'அப்பா கோபமாயிருக்கிறார்'
குழந்தைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்
'தயவுசெய்து' - 'மன்னியுங்கள்'
ஐரோப்பா அதிகம் கேட்ட வார்த்தைகள்
''நேற்றே வந்திருக்கக் கூடாதா''
கடன் கேட்போன் அதிகம் கேட்ட வார்த்தைகள்
'இனிமேல் ஆண்டவன் விட்ட வழி'
மருத்துவமனைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்
* * * * *
போதுமடா சாமி!
போதும்! போதும்!
ஒரே கல்லில் துவைத்துத் துவைத்துச்
சாயம் போயின வார்த்தையின் நிறங்கள்
இனி ஒவ்வொரு சொல்லையும்
ஒட்டடை தட்டுவோம்
இனிமேல் வார்த்தைகளை
இடம் மாற்றிப் போடுவோம்
அத்தனை சொல்லிலும்
ஆக்சிஜன் ஏற்றுவோம்
வார்த்தை மாறினால்
வாழ்க்கை மாறும்
* * * * *
முதலில்
வாழ்க்கையிலிருந்து
வார்த்தையை மீட்போம்
பின்னர்
அர்த்தத்திலிருந்து
வார்த்தையை மீட்போம்
வாழ்வின் நீள அகலம் கருதி
வார்த்தைகளிலும் நாம்
மழித்தல் நீட்டல் செய்வோம்
மரித்தான் என்ற சொல்லை யெறிந்து
வாழ்வை வென்றான் என்று புகல்வோம்
தோல்வி என்னும் சொல்லைத் தொலைத்து
விலகி நிற்கும் வெற்றியென்றுரைப்போம்
எதிரி என்ற வார்த்தை எதற்கு?
தூரத்து நண்பன் சொல்லித் திளைப்போம்
சதிபதி இருவர் சண்டைகள் இட்டால்
முரட்டு அன்பென்று மொழிந்து பார்ப்போம்
இலைகள் கழிந்த கிளைகள் கண்டால்
அடுத்த வசந்த ஆரம்பம் என்போம்
நொந்த தேகம் நோயில் விழுந்தால்
உடம்பே கொள்ளும் ஓய்வென்றுரைப்போம்
வெள்ளைச் சட்டையில் மைத்துளிபட்டால்
மையைச் சுற்றிலும் வெண்மையென்போம்
நிலவைத் தொலைத்த வானம் என்பதை
விண்மீன் முளைத்த விண்வெளி என்போம்
எதிர்மறை வார்த்தைகள்
உதிர்ந்து போகட்டும்
உடன்பாட்டு மொழிகள்
உயிர் கொண்டெழட்டும்
பழைய வார்த்தைகள் பறித்துப் பறித்துப்
புதிய நிலத்தில் பதியன்போடுவோம்
புளித்த வார்த்தைகள் மாறும்போது
சலித்த வாழ்க்கையும்
சட்டென்று மாறும்
சிறுமியும் தேவதையும்....
திடீரென்று...
மேகங்கள் கூடிப்
புதைத்தன வானை
ஒரே திசையில் வீசலாயிற்று
உலகக் காற்று
பூனையுருட்டிய கண்ணாடிக்குடமாய்
உருண்டது பூமி
மருண்டது மானுடம்
அப்போதுதான்
அதுவும் நிகழ்ந்தது
வான்வெளியில் ஒரு
வைரக்கோடு
கோடு வளர்ந்து
வெளிச்சமானது
வெளிச்சம் விரிந்து
சிறகு முளைத்த தேவதையானது
சிறகு நடுங்க
தேவதை சொன்னது:
''48 மணி நேரத்தில்
உலகப்பந்து கிழியப் போகிறது
ஏறுவோர் ஏறுக என்சிறகில்
இன்னொரு கிரகம் எடுத்தேகுவேன்
இரண்டே இரண்டு
நிபந்தனைகள்:
எழுவர் மட்டுமே ஏறலாம்
உமக்குப் பிடித்த ஒரு பொருள் மட்டும்
உடன்கொண்டு வரலாம்''
* * * * *
புஜவலியுள்ள இளைஞன் ஒருவன்
சிறகு நொறுங்க ஏறினான்
அவன் கையில்
இறந்த காதலியின்
உடைந்த வளையல்
முதல் முத்தத்து ஞாபகத்துண்டு
* * * * *
'இன்னொரு கிரகம் கொண்டான்
என்றென்றும் வாழ்க'
கொட்டிமுழங்கும் கோஷத்தோடு
சிறகேறினார் அரசியல்வாதி
தங்கக் கடிகாரம் கழற்றியெறித்து
களிம்பேறிய கடிகாரம் கட்டிக்கொண்டார்
உள்ளே துடித்தது -
சுவிஸ் வங்கியின்
ரகசியக் கணக்கு.
* * * * *
இறந்துவிடவில்லையென்ற சோகத்தை
இருமி இருமியே
மெய்ப்பித்துக் கொண்டிருக்கும்
நோயாளி ஒருவர்
ஜனத்திரள் பிதுக்கியதில்
சிறகொதுங்கினார்
அவர் கையில் மருந்து புட்டி
அதன் அடிவாரத்தில்
அவரின்
அரை அவுன்ஸ் ஆயுள்
* * * * *
அனுதாப அலையில்
ஒரு கவிஞனும் சிறகு தொற்றினான்
ஜோல்னாப் பையில்
-
அச்சுப் பிழையோடு வெளிவந்த
முதல் கவிதை
* * * * *
தன் மெல்லிய ஸ்பரிசங்களால்
கூட்டம் குழப்பி வழிசெய்து
குதித்தாள் ஒரு சீமாட்டி
கலைந்த ஆடை சரிசெய்ய மறந்து
கலைந்த கூந்தல் சரிசெய்தாள்
கைப்பையில்
அமெரிக்க வங்கிக் கடன் அட்டை
* * * * *
கசங்காத காக்கிச் சட்டையில்
கசங்கிப்போன ஒரு போலீஸ்காரி
லத்தியால் கூட்டம் கிழித்துப்
பொத்தென்று சிறகில் குதித்தாள்
லத்தியை வீசியெறிந்தாள் - ஒரு
புல்லாங்குழல் வாங்கிக் கொண்டாள்
* * * * *
'ஒருவர்
இன்னும் ஒரே ஒருவர்'
என்றது தேவதை
கூட்டத்தில்
சிற்றாடை சிக்கிய சிறுமியருத்தி
பூவில் ரத்தஓட்டம்
புகுந்தது போன்றவள்
செல்ல நாய்க்குட்டியோடு
சிறகில் விழுந்தாள்
'நாய்க்குட்டியென்பது
பொருள் அல்ல - உயிர்
இறக்கிவிடு'
என்றது தேவதை
'நாய் இருக்கட்டும்
நானிறங்கிக் கொள்கிறேன்'
என்றனள் சிறுமி
சிறகு சிலிர்த்தது தேவதைக்கு
சிலிர்த்த வேகத்தில்
சிதறிவிழந்தனர் சிறகேறிகள்
வான் பறந்தது தேவதை
சிறுமியோடும் செல்ல நாயோடும்.
முரண்பாடுகள்
போதிமரம்போதும்
புத்தனை புதைத்துவிடு
கொடிகள் காப்பாற்று
தேசத்திற்கு தீயிடு
சின்னங்கள் முக்கியம்
சித்தாந்தம் எரித்துவிடு
கவிஞனுக்கு சிலை
கவிதைக்கு கல்லறை
உரை போதும் பிழைப்பிற்கு
மூலம் கொளுத்திவிடு
மன்னனுக்கு மகுடமிடு
மக்களுக்கு லாடமடி
நீதிமன்றம் சுத்தம்செய்
நீதிக்கு குப்பைக்கூடை
கற்றது மற
பட்டத்திற்கு சட்டமிடு
பெட்டி தொலைத்துவிடு
சாவி பத்திரம்
தலைவனை பலியிடு
பாதுகை வழிபடு
அகிம்சை காக்க
ஆயுதம் தீட்டு
பத்தினிக்கு உதை
படத்திற்கு பூ
காதல் கவியெழுத
காமம் நாமெழுத
கற்பு முக்கியம்
கருவைக் கலை
பசியை விடு
கடிகாரம் பார்த்துண்
ஜனநாயகம் காப்பாற்று
ஜனங்களை கொன்றுவிடு
முரண்பாடே நடைமுறையாய்
நடைமுறையே முரண்பாடாய்
சென்று தேய்ந்திறுகின்ர சிறுவாழ்வில்
முரண்பாடெனக்குள் யாதொன்று
மூளை புரட்டி யோசித்தேன்
மிருகத்தை கொல்லாமல்
தேவநிலை தேடுகின்றேன் ...
காலமே என்னை காப்பாற்று
0 comments:
Post a Comment