இரண்டாம் உலகப்போரின் பின்னர் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் பனிப்போர் ஆரம்பித்தது. இந்த பனிப்போர் பல்வேறு தளங்களில் நிகழ்ந்தது. அத் தளங்களில் ஒன்று விண்வெளி ஆராய்ச்சி. இரு நாடுகளும் இராணுவ நோக்கங்களுக்காகவே விண்வெளி ஆராய்ச்சியில் இறங்கியிருந்தன. பின்னர் அது கௌரவப் பிரச்சினையாக மாறியது. இந்தப் பனிப்போர் காரணமாக விண்வெளி ஆராய்ச்சி பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருந்தது. ஆனால் அமெரிக்காவும் ரஷ்யாவும் விண்வெளிப் போட்டியில் இறங்கியது, தத்தமது சொந்த தொழில்நுட்பத்தின் மீதான நம்பிக்கையில் அல்ல, ஹிட்லர் மீதான நம்பிக்கையில் தான் !! முதன்முதல் ராக்கெட் டெக்னாலஜியை கண்டுபிடித்து இரண்டாம் உலகப் போரில் ராக்கெட் மூலம் இங்கிலாந்தைத் துளைத்தெடுத்தார் ஹிட்லர். இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டத்தில் ஜெர்மனிக்குள் புகுந்த ரஷ்யர்கள் v-2 ராக்கெட்டையும் ராக்கெட் டெக்னாலஜி சம்பந்தமான குறிப்புகளையும் எடுத்துக் கொண்டு ரஷ்யா திரும்பினார்கள். அமெரிக்கர்களோ ராக்கெட்டையும் ராக்கெட்டை தயாரித்த விஞ்ஞானிகளையும் தூக்கிக்கொண்டு அமெரிக்கா திரும்பினார்கள். இதன் பின் 1947 இல் தொடங்கிய பனிப்போர் தான் நிலவில் பாட்டி சுட்ட வடையை யார் முதலில் திருடுவது என்ற போட்டியையும் ஏற்படுத்தியிருந்தது.
இந்த போட்டியை ரஷ்யா 04-10-1957 அன்று ஸ்புட்னிக்-1 செய்மதியை பூமியின் சுற்றுவட்டப் பாதையில் முதன்முதலாக நிலை நிறுத்தியதன் மூலம் தொடங்கி வைத்தது. ஸ்புட்னிக்-1 22 நாட்களுக்கு தொடர்ச்சியாக சிக்னல் அனுப்பியிருந்தது. ஸ்புட்னிக்-1 அனுப்பிய சிக்னலைக் கேட்க இங்கே கிளிக் செய்யவும். இதன் தொடர்ச்சியாக 03-11-1957 இல் லைக்கா என்ற பெட்டை நாயையும் விண்வெளிக்கு அனுப்பி விண் பயணத்தில் முன்னிலை பெற்றது. அந்த ராக்கெட்டும் நாயும் மூன்று வாரங்களின் பின் வெடித்துச் சிதறியபோதும் அத் திட்டம் பெரு வெற்றி. இந்த வெற்றியைத் தொடர்ந்து ரஷ்யர்கள் " எங்கள் நாட்டு பெட்டை நாய் கூட விண்வெளிக்குப் போகிறது, அமெரிக்கர்களால் தான் இன்னும் விண்வெளியை அடைய முடியவில்லை " என்று கருத்துத் தெரிவிக்கத் தொடங்கினார்கள். இது அமெரிக்கர்களுக்கு மிகவும் அவமானமாக இருந்தது. இதனையடுத்து அப்போலோ [apollo] திட்டம் உருவாக்கப்பட்டது. இந் நிலையில் அமெரிக்க ஜனாதிபதியாக 20 ஜனவரி 1961 அன்று பொறுப்பேற்ற ஜோன்.எப்.கென்னடி; அப்போலோ திட்டத்திற்கு 2,400 கோடி டாலர் (2012 இல் இதன் மதிப்பு 17376 கோடி டாலர்= 22 லட்சம் கோடி இலங்கை ரூபா! ) ஒதுக்கி அத் திட்டத்தை விரைவுபடுத்த ஊக்குவித்தார். கென்னடி; 12-09-1962 அன்று நாசாவில் ஆற்றிய உரையைக் காண இங்கே கிளிக் செய்யவும்

இதற்கிடையில் ரஷ்யாவால் 1959-09-12 ந் தேதி ஏவப்பட்ட Luna 2; 36 மணி நேரம் கழித்து சந்திரனில் மோதியது. ஆனாலும் அது அழிவதற்கிடையில் படங்களை அனுப்பியிருந்தது. Luna 3; 04-10-1959 இல் அனுப்பப்பட்டு பூமியில் இருந்து பார்க்க முடியாத சந்திரனின் பின் புறத்தை படம்பிடித்து அனுப்பியிருந்தது. அமெரிக்கா 1964 ஜூலை 28 இல் ஏவிய ரேஞ்சர்-7 விண்கலம் சந்திரனின் முன் புறத்தை படம்பிடித்து அனுப்பியது.
yuri gagarin
1961-04-12 இல் ஜூரி ககாரினை (yuri gagarin) விண்வெளிக்கு அனுப்பியது ரஸ்யா. இவர் தான் விண்வெளிக்குச் சென்ற முதலாவது மனிதன். லைக்காவும் விண்கலமும் முன்னர் வெடித்துச் சிதறியிருந்த போதும் இவர் risk எடுத்தே விண்ணுக்குச் சென்றிருந்தார். பின்னர் வெற்றிகரமாக பூமிக்கும் திரும்பியிருந்தார். ஜூரி ககாரின் விண்ணுக்கு சென்ற அற்புத தருணத்தைக் காண்க

ரஷ்யா விண்ணுக்கு மனிதனை அனுப்பி ஒரு மாதத்திற்குள்ளாகவே 1961-05-05 இல் Alan Shepard ஐ அமெரிக்காவும் விண்வெளிக்கு அனுப்பியது. அமெரிக்கா அதற்கு முன் நாய், பூனை என்று எதையுமே விண்ணுக்கு அனுப்பியிருக்கவில்லை. உடனடியாகவே மனிதனை வைத்து risk எடுத்து அனுப்பியிருந்த்தர்கள். இதன் வெற்றி விழாவில் "இந்தப் பத்தாண்டு முடிவுறுவதற்கு முன்பு மனிதன் இயக்கும் ஒரு விண்வெளிக் கலத்தை சந்திரனில் இறங்கும்படி செய்வதற்கு அமெரிக்கா உறுதி பூண்டிருக்கிறது" என்று அறிவித்தார் கென்னடி.
மேலும் 1963-06-16 இல் valentina vladimirovna tereshkova என்ற ரஷ்ய வீராங்கனை விண்ணுக்குசென்ற முதல் பெண் என்ற பெருமையை தட்டிச் சென்றார். இவர் தனது Vostok 6 விண்கலத்தில் இருந்தபடியே இரண்டு நாட்களுக்கு முன்னர் 14ந் தேதி விண்ணுக்கு அனுப்பப்பட்ட Vostok 5 உடன் தொடர்பை ஏற்படுத்தி [ அக் கலத்தில் இருந்தவர் Valery Bykovsky ] விண்கலம் to விண்கலத்திற்கான தொடர்பாடல் முறையையும் பரீட்சித்துப் பார்த்திருந்தார். இவர்கள் அனைவரும் பூமியின் சுற்று வட்டப் பாதையில் சுற்றிவிட்டு மீண்டும் வெற்றிகரமாகப் பூமிக்குத் திரும்பியிருந்தனர்.
அதுவரை நிலவுக்கு அனுப்பப்பட்ட ரஷ்ய, அமெரிக்க விண்கலங்கள் யாவும் நிலவில் மோதி அழிவடையும் வகையிலேயே அனுப்பப்பட்டிருந்தன. அவை மோதுவதற்கு முன் தேவையான படங்களை எடுத்து அனுப்பியிருந்தன. நீண்டகாலமாக ரஷ்யர்களால் நிலவில் தரையிறங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட விண்கலங்கள் தோல்வியை மட்டுமே தந்து கொண்டிருந்தன. நீண்ட முயற்சியின் பின் 5 விண்கலங்களை இழந்தநிலையில் 1966-02-03 ஆம் தேதி ரஷ்யாவின் Luna-9 விண்கலம் முதன் முதல் சந்திரனில் மெதுவாகத் தரையிறங்கியது. இதனையடுத்து 4 மாதம் கழித்து 1966-05-30 இல் அமெரிக்காவின் Surveyor-1 சந்திரனில் மெதுவாகத் தரையிறங்கி 11,150 படங்களை பூமிக்கு அனுப்பி வைத்தது.
இந்த கட்டத்தில் தான் அமெரிக்கா; ரஸ்யாவை over take செய்து பாட்டி சுட்ட வடையை முதலாவது ஆளாக திருடப் போகிறது.
{அது எவ்வாறு என்பதை அடுத்த பதிவில் எதிர்பாருங்கள்....}
{தொடரில் ஏதாவது தவறுகள் இருந்தால் தெரியப்படுத்தவும்}
0 comments:
Post a Comment