இன்றைய காலகட்டத்தில் நம்மில் பல இலங்கை வாழ் தமிழர்கள் சிங்கள இராசதானிகளை தெரிந்த அளவுக்கு கூட யாழ்ப்பாண இராஜ்யத்தையோ ,வன்னி இராஜ்யத்தையோ அறியாமையினாலோ இல்லை சந்தர்ப்பம் இன்மையாலோ தெரிந்து வைத்திருக்கவில்லை. எனவே அரசியல் சார்பாகவோ பக்க சார்பாகவோ இல்லாமல் என் அறிவுக்கு எட்டிய வரையில் நான் அறிந்தவற்றையும் தெரிந்தவற்றையும் உங்களுடன் தொடர் கட்டுரை வடிவில் வரலாற்றை அறியத்தரும் நோக்குடன் பகிரலாம் என தொடர்கின்றேன்.
யாழ்ப்பாண வைவபமாலை
யாழ்ப்பாண இராஜ்யத்தை அறிவதற்க்கு பல வரலாற்று ஆய்வாளர்களால் ஆராயப்படும் நூல்களிலும் தொகுப்புக்களிலும் பெரும் இடத்தை பிடித்துக் கொள்வது யாழ்ப்பாண வைபவமாலை ஆகும். இது மாதகலை சேர்ந்த மயில்வாகனப் புலவர் என்பவரால் "மேக்கறூன்" என்ற ஒல்லாந்த மன்னனின் வேண்டுகோளிட்க்கு இணங்க உரைத் தமிழில் எழுதப்பட்ட ஒரு பனுவல் ஆகும். இது கைலாயமாலை,வையாபாடல் ,பரராசசேகரன் உலா மற்றும் இராசமுறை எனும் நூல்களின் துணைகொண்டு எழுதப்பட்டதாக வரலாறு. இந்த நூல்களில் கைலாயமாலை,வையாபாடல் என்பன தற்போது உள்ள போதும் பரராசசேகரன் உலா மற்றும் இராசமுறை என்னும் நூல்கள் வரலாற்று ஆய்வாளரின் கைகளுக்கு எட்டாது மறைக்கப் பட்டு விட்டது அல்லது மறைந்து விட்டது எனப் படுகிறது. எது எப்படியாயினும் பரராசசேகரன் உலா மற்றும் இராசமுறை எனும் நூல்கள் கிடைத்திருப்பின் இன்னும் வரலாறு தெளிவுட்டிருக்கும் என்பதே உண்மை.
சங்கிலியன் கோட்டம் நுழை வாயில் ,
வையாபாடலின் கருத்துப்படி யாழ்ப்பாண அரசின் தோற்றம் கி மு 101 இலும் யாழ்ப்பாண வைபவமாலையின் கருத்துப்படி யாழ்ப்பாண அரசின் தோற்றம் கி பி 12 ஆம் நூற்றாண்டில் தொடங்கியிருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் ஆய்வாளர்கள் கி பி 12 ஆம், கி பி 13 ஆம் நூற்றாண்டுகளில் தோற்றம் பெற்றது என்றும் கூறுவர்.
இயக்கரும் நாகரும்
இலங்கையின் பூர்வீக குடிகளாக கருதப்படுபவர்கள் இயக்கர் மற்றும் நாகர் எனும் குடிகள் ஆகும் . இவர்களில் இலங்கையின் வட பகுதிகளில் பரந்து வாழந்தவர்கள் நாகர்களாகவும் தென் பகுதிகளில் பரந்து வாழ்ந்தவர்கள் இயக்கர்களாகவும் இனம் காணப்படுகிறார்கள் என மகாவம்சம் தெளிவாகக் குறிப்பிடுகின்றது . இலங்கையின் பூர்வீக குடிகளாக கருதப்படும் இயக்கர் மற்றும் நாகர் பற்றி மகாவம்சம்,யாழ்ப்பாண வைபவமாலை, மணிமேகலை போன்ற வரலாற்று சான்றாகத்திகழும் நூல்கள் குறிப்பிட்டாலும் ஆய்வாளர்கள் பலர் பல விதமாக கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாண இராஜ்யத்தின் எல்லைப் பரம்பலும் காலமும்
ஆனால் ஒருசில சிங்கள ஆய்வாளர்களின் பார்வையில் இயக்கரையும் நாகரையும் மனிதர்களாகவோ ,மனித இனத்தவராகவோ கொள்ள முடியாது என்றும் அமானுஷர்களாகவும் இராட்ஷதர்களாகவுமே கொள்ளலாம் என்றும் கூறப் படுகின்றது.
மென்டிஸ் என்னும் சிங்கள ஆய்வாளர் மாகாவம்சத்தால் குறிப்பிடப்படும் இயக்கரும் நாகரும் மனிதர்வர்க்கமே இல்லை என்றும் மணிமேகலையும் ,மகாவம்சமும் நாகரை ஒருபோதும் மனிதராய் காட்டவில்லை என பரனவிதானவும் தங்கள் கருத்துகளை முன் வைத்துள்ளனர்.இவர்களின் பார்வையில் விஜயனின் வருகையே குடியிருப்புக்களையும் நாகரிகங்களையும் ஏற்படுத்தியது என்பதாகும்.
ஆனால் இயக்கரும் நாகரும் பூர்வீக தமிழ் திராவிடக் குடிகள் என்றும் ஒருசாரரின் கருத்துண்டு. இயக்கரும் நாகரும் மனிதர்கள் அல்ல என்ற கருத்து நகைப்புக்கு உரியது என்பதும் விஜயனின் வருகையே சிங்களவர்களின் மூதாதையரின் வரவாய் கருதப் படுவதாலும் விஜயனே குடியேற்றங்களையும் நாகரிகங்களையும் உருவாக்கினான் எனக் காட்டுவதற்குமாகவே இயக்கரையும் நாகரையும் அமானுஷர்களாயும் இராட்ஷதர்களாயும் காட்டப்படுகிறது என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் தம் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
மேலும் பார்ப்போம்... எனது அடுத்த பதிப்பை சோழர்கள் பற்றியோ இல்லை யாழ்ப்பாண இராஜ்யத்தை பற்றியோ இரண்டாம் பாகத்துடன் விரைவில் பதிகின்றேன். இது ஒரு வரலாற்று தொடர் என்பதால் உங்களுக்கு தெரிந்த விடயங்களையும் நான் தெரியப் படுத்த வேண்டிய விடயங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
[ இதன் அடுத்த பதிவிற்கு யாழ்ப்பாண இராஜ்ஜியம்-02]
0 comments:
Post a Comment