Advertise

Featured Post 5

மொஸாட்: உளவாளிகளின் சொர்க்கம்

Written By mayuran on Saturday, May 12, 2012 | 4:22 AM

                        IRAN vs UNITED STATES OF AMERICA & ISRAEL - 04


இந்தக் கட்டுரை IRAN vs UNITED STATES OF AMERICA & ISRAEL தொடரின் ஒரு பகுதியாக இருந்தாலும்கூட மொஸாட்(Mossad)இன் வரலாறு பற்றிய தனிக் கட்டுரையாகவும் அமைகின்றது. ஆகவே நீங்கள் இங்கே {Part-03} கிளிக் செய்து படித்துவிட்டும் தொடரலாம், அல்லது படிக்காமலும் தொடரலாம்.
 மொஸாட் ( Mossad ) என்ற பெயரைக் கேட்டாலே இஸ்ரேலைச் சுற்றியிருக்கும் அரேபிய நாட்டு மக்களுக்கு ஒருவித பயமும் வெறுப்பும் ஏற்படும். 2 ம் உலகப் போருக்குப் பின், ஐக்கிய நாடுகள் அவையின் முடிவின் படி{ அமெரிக்கவின் முடிவின் படி } இஸ்ரேல் உருவாக்கப்பட்டது. உலகின் பல நாடுகளில் சிதறிக் கிடந்த யூதர்களுக்கு அவர்களது பழைய தாய் நாட்டை மீட்டுக் கொடுக்கத்தான் அந்த முடிவு எடுக்கப்பட்டது. அரேபியர்கள், எகிப்தியர்கள் ஆகியோர் வசமிருந்து பல நிலப்பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு இஸ்ரேல் உருவானது. உலகின் பல நாடுகளிலிருந்தும் யூதர்கள் பல்லாயிரக் கணக்கில் கிளம்பிவந்து இஸ்ரேலில் குடியேறினர். ஆனால் உருவாக்கப்பட்ட முதல் நாளிலிருந்தே இஸ்ரேலுக்கு அமைதி கிட்டவில்லை. அரேபியர்களின் வெறுப்பும், விரோதமும் கடுமையாக இருந்தது. ஆகவே தொடர்ந்து தனி நாடாக இருப்பதற்காகவும், தனது சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் இஸ்ரேல் எப்போதும் ஒரு போருக்கான ஆயத்த நிலையிலேயே இருக்க வேண்டியிருந்தது. இன்று வரையும் அந் நிலை தொடருகின்றது.

  இஸ்ரேல் உருவாக்கப்படுவதற்கு முன்பே சிறு சிறு குழுக்கள் யூத அமைப்புகளுக்காக உளவு வேலையில் ஈடுபட்டு வந்தன. நாடு ஏற்படுத்தப்பட்ட பிறகு அத்தகைய சிறு குழுக்களால் ஒரு நவீன அறிவியல் பின்னணியில் இயங்கி வரும் பிற நாட்டு உளவு நிறுவனங்களுடன் போட்டி போட்டு இயங்க இயலவில்லை. ஆகவே உள்நாட்டிலும், அயலிலுள்ள அரபு நாடுகளிலும் இயங்கிவந்த உளவு நிறுவனங்களை முறியடிக்க ஒரு வலுவான அமைப்பு இஸ்ரேலுக்குத் தேவைப்பட்டது. அரபு நாடுகள் எந்நேரமும் இஸ்ரேலைக் கைப்பற்ற சதி வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டேயிருந்தன.


         1948 யூன் மாதத்தில் அன்றைய இஸ்ரேல் பிரதமர் பென்-குரியோன்{David Ben-Gurion }  ஒரு வலுவான உளவு நிறுவனத்தை அமைக்க உத்தரவிட்டார். அந்த நிறுவனம் மூன்று பகுதிகளைத் தன்னுள் அடக்கியிருந்தது. முதல் பகுதிக்கு Bureau of Military Intelligence என்று பெயர். இரண்டாவது பகுதி Political Department of Foreign Affairs என்றழைக்கப்பட்டது. இது வெளிநாட்டு உளவுச் செய்திகளை அறிந்து கொள்வதற்கான பகுதியாகும். மூன்றாவது பகுதி Department of Security என்பதாகும். ஆரம்ப கால கட்டத்தில் இந்த உளவு நிறுவனம் தடுமாறியது. அந்தக் காலகட்ட நவீன கருவிகளோ, வசதிகளோ தன்னிடம் இல்லாததால் திணறியது.

           1951 செப்டெம்பரில் இந்த உளவு நிறுவனம் மாற்றியமைக்கப்பட்டு 'மொஸாட்' என்ற புதுப்பெயர் இடப்பட்டது. பிற நாடுகளில் உளவு பார்ப்பதையும், உள்நாட்டில்; வெளிநாட்டு உளவாளிகள் நுழைந்து விடாமல் கண்காணிப்பதையும் வேறு சில சிறப்பு அலுவல்களையும் மொஸாட் ஏற்று செய்யத் தொடங்கியது. மொஸாட்டின் தலைவர் அந்நாட்டு பிரதமருக்கு மட்டுமே கட்டுப்பட்டவர். தனது நடவடிக்கை விபரங்களைப் பிரதமருக்கு மட்டுமே அவர் எடுத்துரைப்பார்.

         யூதர்களைப் பொறுத்தமட்டில் மொஸாட் என்கிற பெயர் அவர்களின் பழைய நினைவுகளைக் கிளறக்கூடியது. 1930 -1947 இற்கு இடைப்பட்ட ஆண்டுகளில் பல்லாயிரக் கணக்கில் பிற நாடுகளிலிருந்து யூதர்களை இஸ்ரேலுக்குள் கொண்டுவரும் பணியை இதே பெயருள்ள மற்றொரு இயக்கம் மேற்கொண்டு வெற்றிகரமாக நிறைவேற்றியது. அதன் ஞாபகார்த்தமாகத்தான் 1951 இல் மொஸாட் என்ற பெயர் இந்த உளவு நிறுவனத்துக்கு வைக்கப்பட்டது.

      ஆரம்ப கட்டத்திலிருந்த மொஸாட்டுக்கு சாதகமாக 2 விஷயங்கள் இருந்தன. முதலாவது, அனேகமாக எல்லா நாடுகளிலும் இஸ்ரேலுக்குத் திரும்பாத கணிசமான யூதர்கள் வசித்து வந்தனர். அவர்களிடமிருந்து பலவிதமான உதவிகளை மொஸாட் பெற்றது. அத்துடன் அந் நாடுகளில் மொஸாட்டின் உளவாளிகள் மறைந்து தங்கியிருந்து உளவு வேலைகளில் ஈடுபடுவது எளிதாக இருந்தது. அடுத்தது, இஸ்ரேல் உருவாக்கப்பட்டதிலிருந்தே அண்டை நாடுகளுடன் தொடர்ந்து போரிட வேண்டிய நிலையிலேயே இருந்தது. இதனால் மொஸாட்டின் நடவடிக்கைகள் ஒரு போர்க் கால அடிப்படையிலேயே அமைந்திருந்தது. இதனால் அதன் உளவாளிகள் சோர்ந்துவிட வழியே இல்லைஅத்துடன் அமைதிக்கால நியாயங்கள், தர்மங்கள், சட்டங்கள் ஆகியவை இல்லாததால் மொஸாட் அத்தகைய நியதிகளுக்குக் கட்டுப்பட வேண்டியதில்லை.

        இந்த உலகத்திலுள்ள உளவுத்துறைகளுள் கொலைகளைச் செய்வதற்கு சட்டரீதியாக அனுமதி வழங்கப்பட்டுள்ள ஒரேயொரு உளவுத்துறை மொஸாட் தான். இதற்கென்று ஒரு பிரிவையே மொஸாட் வைத்திருக்கின்றது. தனது தேசத்தின் பாது காப்புக்கு எதிரானவர் என்று யாரையேனும் மொஸாட் உளவாளி சந்தேகப் பட்டால் அவரை அலேக்காகப் போட்டுத்தள்ளி விடலாம். அப்புறம் ஆறுதலாக ஒரு அறிக்கை சமர்ப்பித்து விட்டால் போதும், Game Over. ஆரம்பத்தில் இந்தப் பிரிவு அரசியல் கொலைகளைச் செய்வதற்கே பயன்பட்டு வந்தது. தற்போது, ஈரானில் அணு விஞ்ஞானிகளைப் போட்டுத்தள்ளப் பயன்பட்டு வருகின்றது. இது பற்றி அடுத்து வரும் பாகங்களில் விரிவாகப் பார்க்க இருப்பதால்,தற்போது மீண்டும் மொஸாட்டின் கற்கால வரலாற்றுக்கே செல்வோம்....
       மொஸாட்டின் முதல் தலைவராக இருந்தவர் ரூவென் ஷிலோக் {Reuven Shiloah }. இவர் அரசின் பாதுகாப்புத்துறைத் தலைவர் பதவியையும் வகித்தார். ஆரம்ப ஆண்டுகளில் அமெரிக்காவின் C.I.A ; மொஸாட் உளவாளிகளுக்குப் பயிற்சியளித்தது. விரைவிலேயே உலகத்தரம் வாய்ந்த உளவு நிறுவனமாக மொஸாட் வளர்ந்தது. அது, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உளவு அமைப்புகளின் செயற்பாடுகளைப் பின்பற்றியது. அதன் உளவாளிகள் தற்கால நவீன உபகரணங்கள், தொழில்நுட்பங்கள் அனைத்தையும் கரைத்துக்(?) குடித்தவர்கள். வதந்திகளை உலக நாடுகளிடையே பரப்புவதிலும் வல்லவர்கள்.

       ஜெர்மனியின் மியூனிக் நகரில் 1972 இல் நிகழ்ந்த ஒலிம்பிக் போட்டியில் இஸ்ரேலிய வீரர்களை பணயக் கைதிகளாகப் பிடித்துக் கொலை செய்தார்கள் பலஸ்தீனப் போராளிகள். {பலஸ்தீனப் போராளிகள் இஸ்ரேலிய சிறையிலிருக்கும் தமது சகாக்களை விடுவிக்கும்படி கோரிக்கை விடுத்தார்கள். இஸ்ரேல் அதை நிராகரித்துவிட்டது} இது மொஸாட்டின் தோல்வியாகவே கருதப்பட்டது. வீரர்களுக்குப் போதிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்று மொஸாட்டின் மீது காரசாரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதிலிருந்து பாடம் படித்த மொஸாட்; 1987 இல் இஸ்ரேல் டென்னிஸ் வீரர்கள் 'டேவிஸ் கப்' போட்டியில் விளையாட இந்தியா வந்தபோது கூடவே தனது உளவாளிகளையும் கலந்து அனுப்பியிருந்தது.
இவர்கள் தான் 1972 ஒலிம்பிக்கில் கொல்லப்பட்ட இஸ்ரேலியர்கள் 

         உலக மக்களை வியக்க வைத்த பல வீர தீரச் சாகசச் செயல்களைக் கனகச்சிதமாக முடித்துக் காட்டுவதிலும் இவர்கள் வல்லவர்கள். உதாரணமாக 1973 இல் 'பெய்ரூட்' நகரில் தலைவர்களை அழித்தது, மற்றும் 1976 இல் உகண்டா நாட்டில் "என்டெப்" விமான நிலையத்தில் கடத்தப்பட்ட  விமானத்தையும், அதில் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த பல இஸ்ரேலியர்களையும் இரவோடிரவாகப் பத்திரமாக மீட்டு இஸ்ரேலுக்குக் கொண்டுவந்தமை போன்றவை ஹாலிவுட் படங்களையே மிஞ்சிய சாகசங்கள்.
இது தான் கடத்தப்பட்ட விமானம்
அர்ஜென்டினா நாட்டில் மறைந்து வாழ்ந்து வந்த நாஜி வெறியனான அடால்ப் ஜக்மான் என்பவனை இஸ்ரேலுக்கு வெற்றிகரமாகக் கடத்திவந்து அவன் மீது விசாரணை நடத்தி மரண தண்டனையும் வழங்கியமை 1969 இல் எகிப்தில் பணியாற்றி வந்த 5 நாஜி ஆதரவாளர்களான விஞ்ஞானிகளைக் கண்டுபிடித்துக் கொன்றமை என்று உலகம் முழுக்கவும் மொஸாட்டின் அதிரடிகள் அரங்கேறியுள்ளது.
     ஒரு சில தோல்விகளையும் மொஸாட் தாங்கிக் கொள்ள நேர்ந்தது. 1967 இல் கெய்ரோவிலும், அலெக்ஸான்டிரியாவிலும் இருந்த இங்கிலாந்து, அமெரிக்க நாட்டு அதிகாரிகளின் சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்தி, அந்தப் பழியை எகிப்தியர்கள் மீது போடுவதற்குத் திட்டமிட்டது மொஸாட். இதன் மூலம் எகிப்து அதிபர் நாசர் மீது மேற்குலக நாடுகள் வெறுப்புக் கொள்ளும் என இஸ்ரேல் எதிர்பார்த்தது. ஆனால் திட்டம் தோல்வியடைந்து உளவாளிகள் மாட்டிக்கொண்டனர். இருவருக்குத் தூக்குத் தண்டனையும், 6 பேருக்கு நீண்ட கால சிறைத் தண்டனையும் வழங்கியது, எகிப்திய அரசு. பின்னாளில் எகிப்துக்கும் இஸ்ரேலிய ராணுவத்துக்கும் நடந்த ஆறு நாள் யுத்தத்துக்குப் பின், அந்த ஆறு உளவாளிகளையும் எகிப்தியப் போர்க் கைதிகளுக்குப் பதிலாக மாற்றிக் கொண்டது இஸ்ரேல்.
     மொஸாட்டின் மிகப்பெரிய தோல்வியாகக் கருதப்படுவது, 1975 இல் எகிப்தும் சிரியாவும் கூட்டாக இஸ்ரேல் மீது எதிர்பாராத தாக்குதல் நடத்தியது தான் !! 'ஜாம் கிப்பர் யுத்தம்' என்று அழைக்கப்படும் இந்தத் தாக்குதலை மொஸாட் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.ஆனாலும் கூட இந்த யுத்தத்தையும் வெற்றி கொள்வதற்கு மொஸாட் பெரும் பங்காற்றியிருந்தது. இந்த எதிர் பாராத தாக்குதலால் மொஸாட்டின் செல்வாக்கு பெருமளவில் மங்கினாலும் பின்னர், 1976 உகண்டா விமான நிலையச் சாதனைக்குப் பிறகு,அதன் செல்வாக்கு மீண்டும் அதிகரித்தது.
ஆக மொத்தத்தில், இஸ்ரேலியர்களைப் பொறுத்தவரை மொஸாட் காவல் தெய்வம். மற்றவர்களைப் பொறுத்தவரை அழிக்கும் தெய்வம்.

இந்தப் பதிவோடு சம்பந்தமில்லாவிட்டாலும் இந்தத் தொடரோடு சம்பந்தப்பட்ட, சம்பந்தப்படப் போகின்ற 2 விடயங்கள் கடந்த மாதம் நிகழ்ந்துள்ளன.இப்போது தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள், பின்னர் விரிவாகப் பார்க்கலாம்.
1 >> 15 க்கும் மேற்பட்ட மொஸாட் உளவாளிகளை ஈரான் கடந்த 18 -04 -2012 அன்று கைது செய்துள்ளது.
2 >> Part -02 இல் நாம் குறிப்பிட்ட ( ஈரான் கைப்பற்றிய அமெரிக்க உளவு விமானம்) உளவு விமானத்தின் தொழில் நுட்பங்கள் யாவற்றையும் கண்டுபிடித்து விட்டதாகவும், அதே வகை உளவு விமானங்களைத் தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் 26 -04 -2012 இல் ஈரான் அறிவித்துள்ளது.

{சரி, சென்ற பதிவில் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் சொல்லவில்லையே என்று யோசிக்கிறீர்களா? பதில் அடுத்த பதிவில் தான்!!!}

{தொடரில் ஏதேனும் பிழை இருந்தால் தயவுசெய்து குறிப்பிடவும்}

0 comments:

Post a Comment